தமிழ்நாடு செய்திகள்
இயேசு

தலைவர்கள் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து

Published On 2022-04-16 12:38 IST   |   Update On 2022-04-16 12:38:00 IST
ஈஸ்டர் பண்டிகை நாளை (17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அவற்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அதை உறுதி செய்ய இயேசு பிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:-

கருணையின் உருவாக திகழும் ஏசுவின் போதனைகளை பின்பற்றி, ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ வேண்டும். மன்னிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை தழைத்தோங்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் “ஈஸ்டர் திருநாள்” மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள். கிறிஸ்தவ மக்கள் அனைவரும் “சுய சுகாதார பாதுகாப்புடனும்” மகிழ்ச்சியுடனும் “ஈஸ்டர் திருநாளை” கொண்டாடிட வேண்டும்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம்:-

இயேசு நாதர் சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்த நாளே ஈஸ்டர் திருநாள். இறைமகன் இயேசு விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு வந்து, மீண்டும் விண்ணுலகுக்குச் சென்ற நாளே இயேசு உயிர்த்த நாளாகும். உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். உயிர்ப்புத் திருவிழாவின் ஆசி ஒவ்வொருவர் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைகவென வாழ்த்துகின்றேன்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ ஆகியோரும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News