தமிழ்நாடு
விசாரணை

பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை மிரட்டல் எதிரொலி- உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டுவிடம் விசாரணை

Published On 2022-04-16 05:45 GMT   |   Update On 2022-04-16 05:45 GMT
பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13-ந் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தார். அப்போது காதல் கலப்பு திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் நீலாவதி இருவீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பெண் தனது காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அந்த பெண்ணை காதல் கணவருடன் அனுப்பி வைத்தார்.

புதுமண தம்பதிகள் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது பெண்ணின் உறவினர்கள் அவரைக் காரில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் புதுப்பெண் மீட்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என்றும் தனது விருப்பத்தின் பேரில்தான் அவர்களுடன் சென்றேன் எனவும், பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே காதல் திருமணம் பெண் கடத்தப்பட்டது சம்பந்தமாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறியும் உயர் அதிகாரி ஒருவர் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் நீலாவதியை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதில் மனவேதனை அடைந்த நீலாவதி நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென உயர்அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பினார்.

பின்னர் சோலார் பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் நீலாவதி திடீரென கீழே மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நீலாவதி நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் பணிக்கு திரும்பாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நீலாவதி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் உயர் போலீஸ் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரால் நான் மனஉளைச்சலில் உள்ளேன். என்னை பற்றி உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் என்னை ஆயுதப்படைக்கு போக சொல்லிவிட்டு ஜீப்பை பறித்து கொண்டனர். இதனால் மனஅழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்வதாக கூறி விட்டு சென்றேன். மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர், டி.ஜி.பி.யை சந்தித்து புகார் தெரிவிப்பேன் என்றும் அதில் கூறி இருந்தார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

இன்ஸ்பெக்டர் நீலாவதி ஒரு உயர் அதிகாரி மீதும், தனிப்பிரிவு ஏட்டு மீதும் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. விசாரணைக் குழுவினர் உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு, இன்ஸ்பெக்டர் நீலாவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவார்கள். விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்வதாக கூறி சென்ற இன்ஸ்பெக்டர் நீலாவதி விடுமுறை குறித்து இதுவரை முறையான எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News