தமிழ்நாடு செய்திகள்
நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை ராணுவம் ஒருபோதும் மறக்காது- லெப்டினன்ட் ஜெனரல் அருண் பேச்சு
ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்கு உதவிய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. தன்னலமற்ற சேவையை ராணுவம் ஒருபோதும் மறக்காது என்றார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அப்போது நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் போர்வை, வாளி உள்ளிட்ட பொருட்களை கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 2 முறை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்த புதிய நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று நஞ்சப்பசத்திரத்தில் அமைக்கப்பட்ட புதிய நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தக்ஷின் பாரத் ஏரியா (தென் பிராந்திய) லெப்டினன்ட் ஜெனரல் அருண் கலந்து கொண்டார்.
அவர் மீட்பு பணியில் ஈடுபட்ட சந்திரன் என்பவரை அழைத்து நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்தார். மீட்பு பணியில் தன்னலமற்ற முயற்சிகளில் ஈடுபட்ட கிராமமக்களுக்கு குளிர்கால ஆடைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். குறிப்பாக குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் அவர் நஞ்சப்பசத்திர கிராமமக்களுக்கு தேசமும், ராணுவமும் எப்போதும் நன்றியுடன் இருக்கும். ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்கு உதவிய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. தன்னலமற்ற சேவையை ராணுவம் ஒருபோதும் மறக்காது என்றார்.
மேலும் லெப்டினன்ட் ஜெனரல் அருண் நிருபர்களிடம் கூறும்போது, நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 250 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு என்ன சிகிச்சை தேவையோ அளிக்கப்படும். புதிய நிழற்குடையில் கூட்டம், காத்திருப்பது, வீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வசதி உள்ளது. அங்கு இருக்கைகள், சுவர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது என்றார்.