தமிழ்நாடு செய்திகள்
சிவகங்கை மாணவியின் பெற்றோர் கோரிக்கை

உக்ரைனில் தவிக்கும் மானாமதுரை மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பெற்றோர் கோரிக்கை

Published On 2022-02-26 10:08 IST   |   Update On 2022-02-26 15:30:00 IST
கார்க்யூ விமான நிலையத்தில் இருந்து அனைத்து மாணவ-மாணவிகளையும் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செர்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்கள் பாண்டி- போதும்பொன்னு. இவர்களது 2-வது மகள் பார்கவி. உக்ரைன் நாட்டில் உள்ள கர்வியூ நகரில் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். அங்கு போர் நடந்து வருவதால் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தற்போது ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ கல்லுரிகள் மூடப்பட்டுள்ளது. தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக பார்கவி செல்போன் மூலம் வீடியோ காலில் எங்களுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாலை நேரத்தில் பயங்கரமான சத்தம் கேட்டது என்றும், அது எல்லை பகுதியில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர சத்தம் என்றும் மகள் தெரிவித்தார்.

ரஷ்யா நாட்டின் எல்லை பகுதியில் உள்ள மகள் படிக்கும் மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளதால் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. மூத்த மகள் 5 ஆண்டுகள் உக்ரைனில் தங்கி மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு பாதுகாப்பாக இந்தியா வந்து விட்டார். எனது மகளை போல் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கர்க்யூ நகரில் படித்து வருகின்றனர்.

போர் நடைபெறும் பதற்றமான பகுதியாக உள்ள கார்க்யூ விமான நிலையத்தில் இருந்து அனைத்து மாணவ-மாணவிகளையும் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் 14 மருத் துவ மாணவர்கள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) -கண்காணிப்பு அலுவலர் பழனிக்குமாரிடம் மண்டபத்தை சேர்ந்த 2 மாணவர்களின் பெற்றோர், ராமநாதபுரம் பட்டணம் காத்தான் ராம்நகர் மாணவர் ஜிப்சனின் தந்தை ராஜேந்திரன் ஆகியோர் மகன்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.

மேலும் திருவாடானை அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து மகன் நவீன், ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தை சேர்ந்த நவாஸ் அலி மகன் முகம்மது ஆதிம் ஆகியோரும் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள மற்ற மாணவர்களின் பெற்றோரும் மனு அளிக்கலாம் என்று கண்காணிப்பு அலுவலர் பழனிக்குமார் தெரிவித்தார்.

Similar News