தமிழ்நாடு செய்திகள்
ஜி.ராமகிரு‌‌ஷ்ணன்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published On 2022-02-14 13:50 IST   |   Update On 2022-02-14 13:50:00 IST
மீனவர்களை கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. மத்திய அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாகர்கோவில்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று காலை குமரி வந்தார்.

பின்னர் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் ஏற்கனவே 40 பேரை இலங்கை ராணுவத்தினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

மீனவர்களை கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. மத்திய அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய அரசு, இலங்கை அரசு, தமிழக அரசு இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறேன். சென்னை, சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு சேகரித்து உள்ளேன்.

இன்று குமரி மாவட்டம் வந்து உள்ளேன். நாளை கோவையில் பிரச்சாரம் செய்ய உள்ளேன், 17ந்தேதி தென்காசியில் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பொறுப்பாளர் அகமது உசேன், மாநில குழு உறுப்பினர் பரமசிவம், வேட்பாளர்கள் மோகன், அந்தோணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் ராமகிருஷ்ணன் கொல்லங்கோடு, மேல்புறம், புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

Similar News