தமிழ்நாடு
தென்பெண்ணை ஆற்றங்கரை சீரமைப்பு பணி வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் போடப்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரை சீரமைப்பு பணி - வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-01-29 11:13 GMT   |   Update On 2022-01-29 11:13 GMT
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் கிடப்பில் போடப்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரை சீரமைப்பு பணியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மிக கனமழை பெய்த காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் தரைப்பாலம் பாலம் போன்றவை பெரும் சேதம் அடைந்தது. மேலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துதோடு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு கரையோரம் சீறிப்பாய்ந்து ஓடிய வெள்ளப்பெருக்கால் கரைகள் அடித்து செல்லப்பட்டதால் சாலைகளும் அடித்து செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பெரிய அளவிலான பாராங்கற்கள் கொட்டப்பட்டு, பள்ளத்தில் தரமற்ற குப்பைகள் கலந்த மண்களை கொட்டி சரி செய்து வந்தனர்.

அப்போது கரையோரம் மர தடுப்புகளை அமைத்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2 முறை மண் சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் பல நாட்கள் இவ்வழியாக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வாகனங்கள் சென்று வரும் நிலையில், பணிகள் முழுமை அடையாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.

மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலத்தில் இருந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். ஆனால் தற்போது வரை மண் அரிக்கப்பட்ட இடத்தில் பணிகள் நடைபெறாமல் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தற்போது பெரிய அளவிலான பள்ளங்கள் அப்படியே இருந்துவருகின்றது.

ஆனால் குடிப்பிரியர்கள், ஒரு சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்ட சிமெண்ட் கட்டையின் மீது ஏறி செல்லும் போது தவறி விழுந்தால் கை கால் முறிவு மற்றும் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. ஆனால் இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்டத்தில் தலை நகரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த அவலநிலை ஏற்பட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள பள்ளத்தில் உடனடியாக சீரமைத்து தரைப் பாலம் வழியாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் எளிமையாக செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News