தமிழ்நாடு
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசைத்தறியாளர்கள்.

பல்லடத்தில் விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-24 12:10 GMT   |   Update On 2022-01-24 12:10 GMT
கடந்த 7 வருடங்களாக விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.
பல்லடம்

திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 2லட்சத்து50 ஆயிரம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 7 வருடங்களாக விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. எனவே கூலி உயர்வு வழங்க கோரி திருப்பூர், கோவை மாவட்டத்தில்  விசைத்தறியாளர்கள்  கடந்த 9&ந்தேதி   முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 16-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது. 

வேலை நிறுத்தத்தால்  விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இத்தொழிலை சார்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.   

இதனிடையே கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் 2 முறை கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை 2 முறையும் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தநிலையில் விசைத்தறியாளர்களின் பிரச்சினை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று  பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில்  திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசைத்தறி தொழிலாளர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்   குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் கூலி உயர்வு கோரி கோஷம் எழுப்பினர். 

இது குறித்து விசைத் தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூர், கோவை மாவட்ட ங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலி உயர்வு இல்லாதது, உதிரிபாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை நீடித்து விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. 

ஜவுளி உற்பத்தியாளர்கள் புதிய கூலி உயர்வை அமல் படுத்தவில்லை என்றால் விசைத்தறிகளை இயக்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News