தமிழ்நாடு
அன்புமணி ராமதாஸ்

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகா எதிர்க்க உரிமை இல்லை- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Published On 2022-01-22 07:35 GMT   |   Update On 2022-01-22 07:35 GMT
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டு தான் செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலப் பகுதி கர்நாடக எல்லைக்குள் வருகிறது; இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக காவிரியிலிருந்து தண்ணீர் எடுப்பது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது என்று கர்நாடக அமைச்சர் கர்ஜோல் கூறியிருப்பது அபத்தமானது; காவிரி சிக்கலில் அவருக்கு போதிய புரிதல் இல்லாததையே இது காட்டுகிறது. கர்நாடக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள சிக்கல்கள் அனைத்தும் ஏற்கனவே தீர்க்கப்பட்டவை.

முதற்கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுடன் 29.06.1998 அன்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் நடத்திய பேச்சுக்களில் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

அதன் அடிப்படையில், முதற்கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மத்திய நீர்வளத் துறை துணை ஆணையர் சக்கரவர்த்தி 21.09.1998 அன்று அனுப்பியக் கடிதத்தில், இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டு தான் செயல்படுத்தப்படவுள்ளது. இன்னும் கேட்டால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான தண்ணீர் மேட்டூர் அணையில் அளவிடப்பட்டது. ஆனால், இப்போது பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்டு, அதன் பிறகு தான் ஒகேனக்கலுக்கு வருகிறது.

அதன்படி ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரில் புதுவைக்கான 7 டி.எம்.சி தவிர மீதமுள்ள நீர் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தமானது. அதைக் கொண்டு இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் போது அதில் தலையிட கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

அதனால், இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் விலகியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News