வேலூரில் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயமாக வெளியேற்றம்- லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். வேலூர் நகரப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சுமார் 7 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக லாட்ஜ்களில் தங்கி இருக்கக்கூடிய வெளிமாநிலத்தவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளி மாநிலத்தவர்கள் 65 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் சிஎம்சி ஆஸ்பத்திரியில் உள்ள நர்சு மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. நேற்று வரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் 200 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் சிகிச்சைக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டுள்ளது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லாட்ஜிகளில் தேவையில்லாமல் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாநகராட்சி 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும். கூடுதலாக தங்கியிருப்பவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.
லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களும் ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வேலூரில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சு ஊழியர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.அதனை மீறியும் வெளிமாநிலத்தவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
இதனால் தேவையில்லாமல் தங்கி இருப்பவர்களை வெளியேற்றி வருகிறோம்.லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதியில் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும் மற்றவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.