தமிழ்நாடு செய்திகள்
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது - நீலகிரி, கோவையில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி:
சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் எப்போதும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை பார்வையிடும் நேரமும் குறைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர்.
மாலை 3 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்த சுற்றுலா பயணிகளும் வெளியே அனுப்பப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நேரம் குறைக்கப்பட்டது தெரியாமல் சில சுற்றுலா பயணிகள் 3 மணிக்கு பிறகு சுற்றுலா தலங்களுக்கு வந்தனர்.
அவர்கள் சுற்றுலா தலங்கள் பூட்டியிருந்ததை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தொடர்ந்து இன்று முழு ஊரடங்கு காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், ஊட்டி படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் உள்பட ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படவில்லை.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எங்குமே ஆட்களை பார்க்க முடியவில்லை.
இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடந்தது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை, டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம், கோவை குற்றாலம், பரளிக்காடு சுழல் சுற்றுலா என எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்த சுற்றுலா தலங்களுக்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வாகனங்களில் வருவார்கள். இன்று முழு ஊரடங்கு என்பதால் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.