தமிழ்நாடு செய்திகள்
பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா? என ஊழியர்கள் சோதனை செய்த காட்சி.

பூங்காக்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Published On 2022-01-08 09:44 IST   |   Update On 2022-01-08 09:44:00 IST
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஊட்டி:

மலைமாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா மையங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள் உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் நடவடிக்கையாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சிம்ஸ் பூங்கா போன்ற அனைத்து சுற்றுலா மையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இன்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பூங்காவுக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் தவணை செலுத்தியிருந்தவர்களும், தடுப்பூசி செலுத்தாதவர்களையும் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.

இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன், தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டு திரும்பி சென்றனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Similar News