தமிழ்நாடு செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளியில் உறைபனி படர்ந்திருப்பதை காணலாம்

ஊட்டி, கோத்தகிரியில் கடும் உறைபனி- தேயிலை மகசூல் பாதிப்பு

Published On 2021-12-16 10:08 IST   |   Update On 2021-12-16 10:08:00 IST
உறைபனியால் காலையில் கடும் மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட கூடுதலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. டைகர்ஹில் அணை, கோடப்பமந்து, அப்பர், தொட்டபெட்டா, லோயர், கிளன்ராக் உள்பட 5 அணைகளும் நிரம்பியுள்ளன.

தற்போது மாவட்டம் முழுவதும் மழை குறைந்து சற்று வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான காந்தல் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலையோர புல்வெளிகளிலும் உறைபனி காணப்படுகிறது.

இன்று அதிகாலை நேரத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடிகள், மரங்களில் உள்ள இலைகள் மற்றும் தாவரவியல் பூங்கா புல்வெளி தரைகள், மலர்செடிகள் என அனைத்திலும் உறைபனி காணப்பட்டது.

உறைபனியால் காலையில் கடும் மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள சோலூர் மட்டம், கொடநாடு, கீழ் கோத்தகிரி பகுதிகளிலும் உறைபனி நிலவியது. உறைபனி காரணமாக காலை நேரங்களில் சாலையோரம் இருந்த புல்வெளிகள் அனைத்தும் பனிகட்டியாக காட்சியளித்தன. வெயில் வந்த பின்னரே உறைபனி உருக தொடங்கியது.

உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காலை நேரங்களில் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வெயில் வந்த பின்னரே வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். கடுமையான பனியால் அதிகாலையில் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்த பகுதிகளில் அதிகளவில் மலைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி மற்றும் தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் உறைபனி காரணமாக தேயிலை மகசூல் பாதிப்படைந்துள்ளது.

இதுதவிர மலைக்காய்கறிகளான கேரட், முள்ளங்கி போன்ற பயிர்களில் பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயிர்கள் சேதமாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




Similar News