தமிழ்நாடு
ஜார்கண்ட் மாநில பெண்ணை கையில் கம்பு வைத்திருக்கும் நபர் தாக்கும் காட்சி

நூற்பாலையில் ஜார்கண்ட் பெண் மீது தாக்குதல்- விடுதி பெண் வார்டன் உள்பட 2 பேர் கைது

Published On 2021-12-05 10:11 GMT   |   Update On 2021-12-05 10:11 GMT
சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஜார்கண்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழிகளுடன் பணியாற்றி வந்தார்.
கோவை:

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் ஜார்கண்ட் உள்பட பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணியாற்றுபவர்களுக்கு என்று இங்கு விடுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இங்கு தங்கியிருந்தே பணிக்கு சென்று வந்தனர்.

இந்த நூற்பாலையில் ஜார்கண்டை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தனது தோழிகளுடன் பணியாற்றி வந்தார்.

விடுதியில் தங்கியிருந்த இவரை ஆண் ஒருவர் கம்பால் தாக்கி மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விடுதியில் இருந்த ஜார்கண்ட் பெண்ணுக்கு கடந்த 27-ந் தேதி உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து விடுதி வார்டன் லதா, அங்கு வேலை பார்க்க கூடிய ஊழியரான முத்தையா என்பவருக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2 பேரும் அந்த பெண்ணை அழைத்து, உடனே வேலைக்கு வா என அழைத்துள்ளனர். அவர் உடல்நலம் முடியவில்லை தன்னால் வர முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விடுதி வார்டன் லதா மற்றும் ஊழியர் முத்தையா ஆகியோர் அங்கிருந்த கம்பை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் அந்த பெண் கதறி அழுதுள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அடித்தனர்.

இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் நேரடியாக அந்த மில்லிற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து விடுதி வார்டன் லதா மற்றும் ஊழியர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே ஜார்கண்ட் மாநில பெண்ணை விசாரிப்பதற்காக போலீசார் தேடினர். ஆனால் அவர் சம்பவம் நடந்த மறுநாளே சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் வேலைக்கு வர மறுத்த இளம்பெண்ணை விடுதி வார்டன் மற்றும் ஊழியர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News