தமிழ்நாடு
கைது

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேர் கும்பல் கைது

Published On 2021-12-05 05:52 GMT   |   Update On 2021-12-05 05:52 GMT
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேரை பாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை கக்கன்நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 25). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளை கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த மகேஷ்(25), கண்ணன்(24) ஆகியோர் ராஜாவின் வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர். அதற்கான வாடகை தொகை ரூ.5 ஆயிரத்தை தருமாறு ராஜா கேட்டார்.

இருவரும், ராஜாவை சாந்திநகருக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். அப்போது ரூ.10 ஆயிரம் தருவதாகவும், வாடகை போக மீதி பணத்தை செலவு செய்து கொள்ளுமாறும் ராஜாவிடம் போனில் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜா, பாளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் ராஜாவை சாந்தி நகருக்கு போக சொல்லிவிட்டு அங்கு மறைந்திருந்தனர். அப்போது மகேஷ், கண்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். உடனே மறைந்திருந்த தனிப்படையினர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்து பார்த்தபோது ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாளை மணக்காட்டை சேர்ந்த பிரவீன் (24) என்பவர் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுமாறு கூறியதாக தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் பிரவீனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஆனந்தமணி(23), பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்த நம்பிராஜன்(29) என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது நம்பிராஜன், சந்திப்பு பாலம் அருகே அலுவலகம் நடத்தி வந்ததாகவும், அப்போது சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பூல்பாண்டி(34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த முருகன்(40) என்பவர் கள்ளநோட்டுகளை சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

முருகன் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார், கல்லிடைக்குறிச்சிக்கு விரைந்து சென்று அவரை மடக்கிப்பிடித்தனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரம் மூலம் நோட்டுக்களை அச்சடித்து அதனை புழக்கத்தில் விட்டு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மதுரையில் இதேபோல் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டபோது முருகனை மதுரை தனிப்படையினர் கைது செய்தனர். அவரது குடோனுக்கு சென்று அச்சடிக்க பயன்படுத்திய எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார். பின்னர் மீண்டும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தற்போது எந்திரங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.

இதற்கு முன்பு கடைசியாக அச்சடித்தபோது மீதமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை மட்டுமே புழக்கத்தில் விட்டேன் என தெரிவித்ததாக கூறினார். இது தொடர்பாக அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேரையும் கைது செய்தனர். முருகன் வேறு எங்கும் மறைவான இடத்தில் எந்திரங்களை வைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்தாரா? இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டார்கள்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News