செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

உயர்கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2021-11-18 08:48 GMT   |   Update On 2021-11-18 08:48 GMT
தமிழக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன.

சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரிவித்த மாநில அரசு, படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை படிப்படியாகத் திறந்து வருகிறது.

இச்சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் 2½ மாதங்களே ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவமழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த செமஸ்டருக்கான சிலபஸ் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத்திட்டம் (சிலபஸ்) கல்லூரி பேராசிரியர்களுக்குக்கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், செய்திகள் வருகின்றன.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

எனவே, அனைத்து கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால்தான் மாணவச்செல்வங்கள் முழு திறமையோடு தேர்வை எதிர் கொள்ள முடியும்.

இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறவேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News