செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பஸ்கள் 50 சதவீதமாக குறைப்பு

Published On 2021-11-17 12:44 IST   |   Update On 2021-11-17 12:44:00 IST
நாளை முதல் 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா நடந்து வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை மறுநாள் அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, கூடுதல் கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி கூறியதாவது:-

திருவண்ணாமலை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா பரவலை தடுக்க இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

எனவே திருவண்ணாமலைக்கு வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்படும். எனவே நாளை (18-ந்தேதி) முதல் 20-ந்தேதி வரை 50 சதவீத பஸ்கள் மட்டுமே திருவண்ணாமலைக்கு வந்து செல்லும்.

அனுமதிக்கப்பட்ட பஸ்களை தவிர்த்து வேறு வாகனங்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லையிலும், நகர எல்லையிலும் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும் என்றனர்.

இதைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில்:-

மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கிற கட்டுப்பாடு காரணமாக பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறையும். அதனால் 50 சதவீதம் இயக்கினாலும் எங்களுக்கு இழப்புதான் ஏற்படும்.

எனவே 3 நாட்களுக்கு தனியார் பஸ்கள் இயக்குவதை தவிர்க்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News