செய்திகள்
தண்டவாளதத்தை விட்டு ரெயில் தடம் புரண்டு உள்ளதை காணலாம்

தருமபுரி அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

Published On 2021-11-12 04:37 GMT   |   Update On 2021-11-12 07:08 GMT
பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொப்பூர்:

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

இன்று காலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே ரெயில் வந்தது. அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் இருந்த பாறைகள் திடீரென ரெயில் பெட்டிகள் மீது விழுந்தன. இதில் 6 பெட்டிகள் மீது விழுந்ததால் ரெயில் தடம்புரண்டது.

இதைத்தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் பெட்டிகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 6 பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு இறங்கினர்.

அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் நடுவழியில் பயணிகள் தவித்தனர். மேலும் மலையில் இருந்து உருண்ட பாறைகள் தண்டவாளத்தில் கிடந்தன.



இதுபற்றி பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம் சிங் தலைமையில் மருத்துவ உபகரண வேனுடன் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் விரைந்து வந்து ரெயில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீட்பு குழுவினரும் வந்தனர்.

தடம்புரண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும், பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரெயிலில் 7 பெட்டிகள், மாற்று என்ஜீன் மூலம் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் 4 பெட்டிகள் தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பாறைகள் விழுந்து கிடக்கும் 6 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரெயில் தடம் புரண்ட விபத்தில் ரெயில் இருந்த 2348 பயணிகளும் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர்.

நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் தவித்தனர்.

பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக சேலம்-பெங்களூரு ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பயணிகள் குறித்து தகவல்களை பெற தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News