செய்திகள்
சிக்னல் கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் 2 மணி நேரமாக தாமதமாக சென்றதால் அவதிப்பட்ட பயணிகள்

சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு

Published On 2021-11-10 07:40 GMT   |   Update On 2021-11-10 07:40 GMT
சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை:

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

சென்ட்ரல்-பரங்கிமலை, சென்ட்ரல்-விமான நிலையம் இடையே நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்களுக்கு பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பேருதவியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பரங்கிமலை-சென்ட்ரல் வழித்தடத்தில் இன்று காலையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. அசோக்நகர்-கோயம்பேடு இடையே ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளறால் மெட்ரோ ரெயில் சேவை காலை 6 மணி முதல் 8 மணி வரை கடுமையாக பாதித்தது.

இரண்டு பாதையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பின்னர் மாற்று ஏற்பாடாக ஒரே பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் காலதாமதம் ஏற்பட்டது.

ரெயில்களை ஒரே பாதையில் மாற்றி இயக்கும் போது ஒரு சில ரெயில் நிலையங்களில் ரெயில்களை அதிக நேரம் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அசோக் நகர்- கோயம்பேடு இடையே மெட்ரோ ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டு மாற்றி விடப்பட்டன. இதன் காரணமாக குறித்த ரெயில்களை இயக்க முடியவில்லை.

பரங்கிமலையில் இருந்து புறப்பட்ட ஒரு மெட்ரோ ரெயில் அசோக்நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயிலில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். மற்றொரு ரெயிலில் அவர்களை ஏற்றி அனுப்பப்பட்டனர்.

நிறுத்தப்பட்ட ரெயில் மீண்டும் பரங்கிமலைக்கு திருப்பி விடப்பட்டது.

சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலையில் பயணம் செய்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தாமதத்துடன் தங்களது அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்ள நேரிட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News