செய்திகள்
ஆட்கொல்லி புலி

ஆட்கொல்லி புலியின் உடல் நிலை நன்றாக உள்ளது - வனத்துறை தகவல்

Published On 2021-10-17 02:23 GMT   |   Update On 2021-10-17 02:23 GMT
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி புலியின் உடல்நிலை நன்றாக உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று முன்தினம் வனத்துறையினர் கார்குடி பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அப்போது புலியின் உடலில் காயங்கள் இருந்ததாலும், உடல்நிலை சோர்வாக இருந்ததாலும் உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு ஆட்கொல்லி புலி கூண்டில் அடைத்து கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு புத்துணர்வு மையத்திற்கு நள்ளிரவில் மினி லாரியில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டில் உள்ள புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புலியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி மைசூரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது புலி மயக்கம் தெளிந்து உள்ளது. கூண்டுக்குள் உறுமியபடி புலி உள்ளது.

உயிரியல் பூங்காவில் புத்துணர்வு மைய கால்நடை டாக்டர்கள் புலியின் உடலில் பல்வேறு பகுதிகளில் உள்ள காயங்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் ரத்த சோகையால் புலி சோர்வுடன் உள்ளது. ஆனால் இறைச்சியை உண்ண தொடங்கி நல்ல நிலையில் இருக்கிறது என்றனர்.

Tags:    

Similar News