செய்திகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் காட்சி.

2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் ஸ்தம்பித்த நீலகிரி

Published On 2021-10-12 04:37 GMT   |   Update On 2021-10-12 04:37 GMT
ஊட்டியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. பிற்பகலில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 9.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

ஊட்டியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகளும் ரோட்டில் உருண்டு விழுந்தன.

பர்லியார் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.

இதேபோல குன்னூர் பேரக்ஸ் சாலையில் அன்னை வேளாங்கண்ணி நகர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. கே.என்.ஆர். நகர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் அவற்றை அகற்றும் பணி இன்று 2-வது நாளாக நடந்தது.

கனமழையால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் தடுப்புச்சுவருடன் கூடிய சுமார் 50 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அதனை சாலையில் விழுந்த கட்டிட இடிபாடுகளை சீரமைக்கும் பணி நடந்தது. பேரட்டி ஊராட்சி பாரத் நகரில் மூர்த்தி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.

ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. அந்த வழியாக 2 ஜீப் டிரைவர்கள் செல்ல முயன்றனர். அப்போது மழை வெள்ளத்தில் ஜீப் சிக்கிக் கொண்டது. 2 ஜீப்களில் இருந்த 7 பேரும் தவிப்புக்கு ஆளானார்கள். தீயணைப்பு வீரர்கள் விரைந்து 7 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.

கடந்த 10-ந் தேதி கல்லார்- அடர்லி இடையே ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அந்த பணி பாதிக்கப்பட்டதால் இன்றும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலையும் பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை நிலவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பந்தலூர்-60, ஊட்டி-41, குந்தா-32, அப்பர்பவானி--44, கிண்ணக்கரை-31, கேத்தி-72.
Tags:    

Similar News