செய்திகள்
தற்கொலை செய்யப்போவதாக கூறி அமர்ந்து இருந்த புருஷோத்தமனை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

Published On 2021-09-23 03:01 GMT   |   Update On 2021-09-23 03:01 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். நேற்று ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணியளவில் வாலிபர் ஒருவர் ராஜகோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்கு மேல் ஏறி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைப்பார்த்தவர்கள் கோவிலின் ராஜகோபுர பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜகோபுரத்தின் கீழ்பகுதியில் நின்றவாறு அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். அப்போது அவர், நான் புதியதாக வாங்கிய செல்போனை ஒருவர் எடுத்து சென்று தலைமறைவாகி விட்டார். அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தராவிட்டால் ராஜகோபுரம் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அந்த நபரிடம் சுமார் 1 மணி நேரம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் ராஜகோபுரத்தின் மேல் ஏறி சென்று அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். கோபுரத்தின் முன் இதனை ஏராளமானோர் பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வர்சிகுடி வடக்கு கூவம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவர், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News