செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு மாவட்டத்தில் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-22 05:10 GMT   |   Update On 2021-09-22 05:10 GMT
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மாணவிகள் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோபி செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 2 ஆயிரம் மாணவ,மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று முதல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் மலையப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவர் படித்த பள்ளி மற்றும் வசித்த குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதே போல் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மாணவிகள் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி உள்ள ஒரு மாணவி குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவிகள் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் உண்டு உறைவிடப்பள்ளியில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News