செய்திகள்
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் காட்சி.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17,844 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-07-24 04:33 GMT   |   Update On 2021-07-24 04:33 GMT
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூர் அணை நிரம்பியது. இதையடுத்து பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 789 தண்ணீராக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 844 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98.95 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டி விடும். எனவே அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சி, பவானிசாகர் பேரூராட்சி சார்பில் மாமரத்துப்படித்துறை, அக்ரஹாரம், பரிசல்துறை, கொமாரபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகள், ஆலத்துக்கோம்பை மற்றும் பவானிசாகர் பூங்கா, கொட்டாம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன் துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

அதில் பவானி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வருவதால் பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News