செய்திகள்
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

வருகிற 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

Published On 2021-07-14 09:18 IST   |   Update On 2021-07-14 19:27:00 IST
ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து இருக்க வேண்டும். ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகர், புறநகர், குன்னூர், தேவாலா, கூடலூர் என 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு 42 இருசக்கர வாகன விபத்துகள், 2020-ம் ஆண்டு 42 விபத்துகள், 2021-ம் ஆண்டு 26 விபத்துகள் நடந்து உள்ளன.

இதில் 2019-ம் ஆண்டு 8 பேரும், 2020-ம் ஆண்டு 5 பேரும், நடப்பாண்டில் 8 பேரும் உயிரிழந்தனர். மேலும் ஆண்டுகள் முறையே 50, 49, 20 பேர் என கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட விபத்துகளில் உயிரிழப்புக்கு காரணம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் சரியாக ஹெல்மெட் அணியாமல் இருந்ததே என தெரியவந்துள்ளது.



இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின்படி அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அலட்சியம் செய்து சிலர் பயணித்ததால் விபத்துகளில் உயிரிழப்புகளும், கை, கால் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.வாகன விபத்துகளில் இறப்புகள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதால் இறப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங்களில் இதை தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து இருக்க வேண்டும். ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பொதுமக்கள், காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Similar News