செய்திகள்
வேலூர் மாங்காய் மண்டியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் மழை வெள்ளம் தேங்கியுள்ள காட்சி

வேலூரில் பலத்த மழை- தற்காலிக மார்க்கெட்டில் 150 டன் காய்கறிகள் நனைந்து நாசம்

Published On 2021-05-31 06:54 GMT   |   Update On 2021-05-31 06:54 GMT
வேலூரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தக்காளி, வெங்காயம் உட்பட சுமார் 150 டன் காய்கறிகள் நனைந்துள்ளன.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று பகல் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. நேற்று மாலை வேலூரில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.

வேலூர் மாநகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் பழைய பஸ் நிலையம், கிரீன்சர்க்கிள் பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது.

வேலூர் மாங்காய் மண்டி அருகே தற்காலிக மொத்த விற்பனை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மழையால் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

மேலும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தக்காளி, வெங்காயம் உட்பட சுமார் 150 டன் காய்கறிகள் நனைந்துள்ளன. இதனால் பெரும் சேதம் மற்றும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக இருந்ததால் காய்கறி வாங்க வருபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.

தற்காலிகமாக காய்கறி கடை வைப்பதற்கு இந்த இடம் உகந்ததாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்ட பொதுமக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வாணியம்பாடி நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது அதிகபட்சமாக ஆம்பூரில் 31 மீட்டர் மழை பதிவானது. பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் லேசான மழை பெய்தது. கோடை மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் விவசாயிகள் இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News