செய்திகள்
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தையை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்த காட்சி

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

Published On 2021-04-15 08:40 GMT   |   Update On 2021-04-15 08:40 GMT
வனத்துறையினர் வீட்டுக்குள் சென்று மயங்கி கிடந்த சிறுத்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கூண்டுக்குள் வைத்து சிறுத்தையை அடைத்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அருகே சிறுத்தை இரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கி கொண்டிருந்த 3 பேரை கடித்தது. அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் பயந்துபோன சிறுத்தையை அறையில் அடைத்து வைத்து வெளியே வந்தனர். வீட்டுக்குள் உள்ள 3 அறைக்குள் அங்கும் இங்குமாக உலாவி கொண்டிருந்தது.

வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறுத்தையை கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி வீட்டு முன்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி நிபுணர்கள் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் வீட்டு முன்பு திரண்டதால் சிறுத்தை 3 அறைகளில் மாறிமாறி சென்று பதுங்கி கொண்டது.

மயக்க ஊசி குழுவினர் வந்ததும் வெளியில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சிறுத்தை கண்ணுக்கு தெரியவில்லை. அறையில் பதுங்கி விட்டது.

அதனை ஹால் பகுதிக்கு கொண்டுவர வைக்கோல் திரிக்கொண்டு புகை பூட்டினர். அப்படியிருந்தும் சிறுத்தை வரவில்லை. அடுத்ததாக ரிமோர்ட் காரை உள்ளே விட்டு அதன் சத்தம் மூலம் சிறுத்தை ஹாலுக்கு கொண்டுவர முயற்சித்தனர்.

சிறுத்தை பதுங்கி இருந்த அறையில் ட்டிரில்லிங் எந்திரம் மூலம் துளையிட்டனர். அந்த சத்தத்தை கேட்டு சிறுத்தை ஹாலுக்கு ஓடிவந்தது. அப்போது மயக்க ஊசி குழுவினர் மயக்க ஊசி துப்பாக்கி குண்டு மூலம் சிறுத்தையை சுட்டனர்.

சிறுத்தை உடலில் மயக்க ஊசி பாய்ந்தது. பின்னர் அங்கும் இங்குமாக பாய்ந்தோடிய சிறுத்தை அங்குள்ள அறைக்குள் சென்று பதுங்கி கொண்டது.

அரைமணி நேரம் கழித்து சிறுத்தை அறையில் மயங்கியது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வீட்டுக்குள் சென்று மயங்கி கிடந்த சிறுத்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கூண்டுக்குள் வைத்து சிறுத்தையை அடைத்தனர். அதன்பின்னர் லோடு ஆட்டோவில் கூண்டை ஏற்றி சிறுத்தையை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

முதல் கட்டமாக டாக்டர் குழுவினர் மூலம் சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்து இயல்பான நிலைக்கு வந்த பின்னர் சிறுத்தையை நடுவனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவார்களா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News