செய்திகள்
விபத்தில் சிக்கிய வேன் கவிழ்ந்து கிடப்பதையும், ஆட்டோ சேதமடைந்துள்ளதையும் படத்தில் காணலாம்.

உடையார்பாளையத்தில் பால்வேன்-ஆட்டோ மோதல்: 2 பெண்கள் பலி

Published On 2021-04-09 19:21 GMT   |   Update On 2021-04-09 19:21 GMT
உடையார்பாளையத்தில் கோவிலுக்கு சென்றபோது, பால்வேன்- ஆட்டோ மோதிக்கொண்டதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மனைவி சந்திரா(வயது 50). இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். இவர்களுடைய மகன் மணிகண்டன்(24). ஆட்டோ டிரைவர். காசிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சந்திரா, தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார்.

நேற்று காலை சந்திரா, மணிகண்டன் மற்றும் அவர்களுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த பவுனம்மாள்(65), மணிகண்டனின் நண்பர் செட்டித்திருக்கோணத்தை சேர்ந்த நித்தியானந்தம்(54) ஆகியோர் வி.கைகாட்டியில் இருந்து உடையார்பாளையம் பெரிய கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை டிரைவர் சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்த சிற்றரசு(28) ஓட்டினார்.

உடையார்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது, உடையார்பாளையத்தில் கடைகளுக்கு பால் இறக்கிவிட்டு வந்த வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சந்திரா, பவுனம்மாள் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மணிகண்டன், நித்தியானந்தம், சிற்றரசு மற்றும் வேன் டிரைவர் உடையார்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்(27) ஆகியோர் படுகாயமடைந்தனர். வேன், ஆட்டோ சேதமடைந்தன. மேலும் வேன் கவிழ்ந்தது.

இது பற்றி தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், வேன் டிரைவர் ரஞ்சித் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News