செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்தது

Published On 2021-03-19 04:44 GMT   |   Update On 2021-03-19 04:44 GMT
தொடர்ந்து வெயில் வறுத்தெடுப்பதால் வீராணம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் நின்றுவிட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து வெயில் வறுத்தெடுப்பதால் வீராணம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் நின்றுவிட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

தற்போது 39.50 அடி தண்ணீர்தான் உள்ளது. எனவே சென்னைக்கு 9 கன அடி நீர் மட்டுமே வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக வடலூர் அருகே உள்ள பரவனாற்றில் இருந்து 19 கனஅடி நீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வாலாஜா ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது. வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5. அடி ஆகும். தற்போது ஏரியில் 5 அடி தண்ணீர் உள்ளது. எனவே இந்த தண்ணீர் பரவனாற்றில் திறந்து விடப்பட்டு அந்த நீரை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் செல்லும் குழாயில் இணைத்து மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு 19 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.

இந்த அளவு படிபடியாக தேவைக்கு ஏற்ப கூட்டப்படும் என்றும் வடலூரில் இருந்து பண்ருட்டிவரை போடப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட போர்வெல்லில் இருந்தும் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News