செய்திகள்
ஹசீனாபேகம்

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்- தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம்

Published On 2021-02-22 04:42 GMT   |   Update On 2021-02-22 04:42 GMT
புதுவையில் பெய்த கனமழையால் பெண் ஒருவர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனாபேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார். அந்த பகுதியில் உள்ள மக்கள், தங்களது வாகனங்களை அங்குள்ள ஓடை பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். ஹசீனா பேகமும் தனது ஸ்கூட்டரை நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தி வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று பெய்த கனமழையால் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து வரத்தொடங்கியது. நேற்று காலை ஸ்கூட்டர் மூழ்கியபடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதை பார்த்து ஹசீனாபேகம் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது ஸ்கூட்டரை மீட்டு எடுத்து பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக சென்றார்.

அப்போது தண்ணீர் அதிகமாக வந்ததால் நிலை தடுமாறி ஹசீனாபேகம் ஓடையில் விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை.

இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கும், மேட்டுப்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News