செய்திகள்
கைது

உல்லாசத்துக்கு இடையூறு- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி உள்பட 6 பேர் கைது

Published On 2021-01-03 13:38 IST   |   Update On 2021-01-03 13:38:00 IST
சிதம்பரம் அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டடு, கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாசில்தார் சுமதி மற்றும் போலீசார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இறந்த வாலிபரின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் இருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்த வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (வயது32). கார் டிரைவர் என்பது தெரிய வந்தது.

இவருக்கு திருமணமாகி தீபா (30) என்ற மனைவியும், 2 குழந்தைகள் இருப்பதும், சத்யராஜ் கொலை செய்யப்பட்டு இந்த பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சத்யராஜ் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சத்யராஜிம், சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னி நத்தம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பவரும் நண்பர்கள் என்பதும், அந்த பழக்கத்தில் அடிக்கடி சத்யராஜ் வீட்டுக்கு வந்து செல்லும் அய்யப்பனுக்கும், சத்யராஜ் மனைவி தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. கள்ளக்காதலை சத்யராஜ் கண்டுபிடித்து இருவரையும் எச்சரித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சத்யராஜை அவரது மனைவி தீபா, கள்ளக்காதலன் அய்யப்பனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தீபா, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து போலீசாரிடம் அய்யப்பன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது நண்பரான சத்யராஜின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்றுவந்தேன். அப்போது எனக்கும் சத்யராஜின் மனைவி தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உலலாசமாக இருந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த சத்யராஜ் எங்களை கண்டித்தார்.

அதனால் சத்யராஜ் உயிரோடு இருந்தால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது என நினைத்தோம். இதனால் நாங்கள் சத்யராஜை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி கடந்த 17-ந் தேதி சத்யராஜை மதுகுடிக்கலாம் என்று கூறி சாத்தமங்கலம் அருகிலுள்ள வாழைத் தோப்புக்குள் அழைத்து சென்றேன்.

பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து சத்யராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை அங்கேயே புதைக்க முயன்றோம். அப்போது மழையால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அங்கு புதைக்க முடியவில்லை.

இதையடுத்து காரில் சத்யராஜ் உடலை ஏற்றி பரங்கிப்பேட்டை அருகே உள்ள வேலங்கிராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்றேன். அங்கு குழிதோண்டி சத்யராஜின் உடலை புதைத்தோம். சில நாள் கழித்து மீண்டும் சடலம் புதைத்த இடத்தில் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் சடலம் மேலே வருவது போல் இருந்தது. பின்னர் நர்சரி கார்டன் சென்று புல் வாங்கி வந்து உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் வைத்தோம். இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல புதைக்கப்பட இடத்தில் இருந்து கை வெளியே தெரிந்ததால் நாங்கள் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சத்யராஜின் மனைவி தீபா, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களான வினோத், சுபாஷ், அருண், கார்த்தி ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News