செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதித்த 120 பேருக்கு வீட்டில் சிகிச்சை- அதிகாரிகள் தகவல்

Published On 2020-10-12 08:42 IST   |   Update On 2020-10-12 08:42:00 IST
வேலூர் மாவட்டத்தில் தற்போது 120 பேர் வீடுகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்த நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி முதல் கொரோனா பாதித்த 40 வயதுக்கு உட்பட்ட வேறு நோய்கள் இல்லாதவர்களுக்கு வீட்டில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த நபர்கள் ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி மற்றும் மருந்துகள் வழங்கப்படும். மேலும் அவர்கள் உடல்நிலை பற்றி அவ்வப்போது கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் டாக்டர்கள் கேட்டறிவார்கள்.

அந்த நபர் வீட்டில் தான் உள்ளாரா என்பதை கண்டறியவும், உடல்நிலை மோசமடைந்தால் அவர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் டாக்டர்கள் பேசுவார்கள். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்சுகள் உடனடியாக அங்கு சென்று முதலுதவி அளிப்பார்கள். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் தற்போது 120 பேர் வீடுகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News