செய்திகள்
கடலூர் மாவட்ட ஆட்சியர்

தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவரை தேடி வருகிறோம்- கடலூர் மாவட்ட ஆட்சியர்

Published On 2020-10-10 14:18 IST   |   Update On 2020-10-10 16:03:00 IST
தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகனை தேடி வருகிறோம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்களிடம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி நேரில் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகனை தேடி வருகிறோம் என்றும் ஊராட்சி மன்ற தலைவிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Similar News