செய்திகள்
நிதி உதவி வழங்கிய போது எடுத்த படம்.

கொரோனாவால் உயிரிழந்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி

Published On 2020-10-09 11:02 IST   |   Update On 2020-10-09 11:02:00 IST
கொரோனாவால் இறந்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா 17 லட்சத்து 29 ஆயிரத்தை 774 ரூபாய்க்கான காசோலையை வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆறுதல் கூறினார்.
கடலூர்:

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நடராஜனும், நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த ஜூலியன் குமாரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட போலீசார் மற்றும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கொரோனாவால் இறந்த நடராஜன், ஜூலியன் குமார் ஆகியோரது குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி போலீசாரின் ஒரு நாள் ஊதியமாக மொத்தம் ரூ.34 லட்சத்து 59 ஆயிரத்து 547 நிதி திரட்டப்பட்டது.

இதையடுத்து கொரோனாவால் இறந்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கொரோனாவால் இறந்த நடராஜன், ஜூலியன்குமார் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா 17 லட்சத்து 29 ஆயிரத்தை 774 ரூபாய்க்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். முன்னதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, பாபு பிரசாந்த், சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News