செய்திகள்
அகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 21 அடுக்கு உறை கிணறு.

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி- அகரத்தில் 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

Published On 2020-09-25 03:14 GMT   |   Update On 2020-09-25 03:14 GMT
கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது அகரம் பகுதியில் 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம்:

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடி ஊராட்சியில் தற்போது 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியின் போது கீழடியில் ஏற்கனவே பெரிய, சிறிய பானைகள், பல வரிசைகள் கொண்ட செங்கல் கட்டிட சுவர்கள், விலங்கின எலும்பு கூடுகள், செங்கலால் ஆன தரைத்தளம், நெருப்பு பயன்பாட்டின் கட்டமைப்பு, எடைக்கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதேபோல் கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், சிறிய, பெரிய மனித எலும்புகள், மண்டை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள், குவளை, சிறிய பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் மணலூரில் சுடுமண் உலை, எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கடந்த 22-ந்தேதி ஏற்கனவே 17 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உறை கிணற்றில் உள்ள அடுக்கு முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டதாக இருந்தது.

இதையடுத்து தொடர்ந்து நேற்று வரை கூடுதலாக குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்தபோது மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்ததது. மேலும் அந்த பகுதியில் மண்ணை அகற்றியபோது 21 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக தற்போது காட்சி அளிக்கிறது. இந்த உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தண்ணீரை எவ்வாறு சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதற்கு முன்னோடிகளாக இருந்ததும், விவசாயத்திலும் சிறந்து விளங்கி இருப்பதும் தெரிகிறது.

மேலும் இப்பகுதியில் குழிகள் ஆழமாக தோண்டும்போது மேலும் கூடுதலான உறைகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த பகுதியில் தற்போது நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முடிக்க இம்மாதம் 30-ந்தேதி வரை தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவுபெறுமா அல்லது அனுமதி காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெரிய வரும். அதே நேரத்தில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதியில் எடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
Tags:    

Similar News