செய்திகள்
கைது

கிசான் திட்ட மோசடி- சேலத்தில் மேலும் ஒருவர் கைது

Published On 2020-09-10 08:47 GMT   |   Update On 2020-09-10 08:47 GMT
சேலத்தில் கிசான் திட்ட மோசடியில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கணினி மையம் நடத்தி வந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம்:

பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 46 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலியாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் போலியாக பதிவு செய்து ரூ.6 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 1.57 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4.5 கோடி ரூபாயையும் வருகிற 14-ந் தேதிக்குள் மீட்க வேளாண், வருவாய்த்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

மேலும் விவசாயிகள் என்ற பெயரில் போலி நபர்களை பதிவேற்றம் செய்து ஏராளமான பணத்தை அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். அதிகாரிகள் சிலரது வங்கி கணக்கிலும் இந்த உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணம் வீணாகி உள்ளது. அதிகாரிகள் யார்-யாருக்கு இதில் தொடர்பு உள்ளது? என்பது குறித்து பட்டியல் தயாரித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தற்காலிக ஊழியர் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, தாரமங்கலத்தில் கணினி மையம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமலூர் வட்டாரத்தில் 258 பேர் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 80 பேரிடம் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. தாரமங்கத்தில் 317 பேர் போலி ஆவணங்களை வழங்கி பணம் பெற்றுள்ளனர். அதில் 35 சதவீதத்தினரிடம் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

காடையாம்பட்டி வட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு 150-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. நங்கவள்ளி வட்டாரத்தில் 199 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, 100 பேரிடம் பணம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து வட்டார பகுதிகளிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளதால் அவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் நங்கவள்ளி கணினி மையம் நடத்தி வந்த கலையரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News