செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரிப்பு

Published On 2020-09-04 06:57 GMT   |   Update On 2020-09-04 06:57 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்:

தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நட்ராம்பாளையம் மற்றும் அதையொட்டி உள்ள தருமபுரி மாவட்டம் கூத்தப்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியிலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒனேக்கல்லில் நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 89.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சுமார் 1 அடி உயர்ந்து 90.36 அடியாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News