இந்தியா

2030-ம் ஆண்டுக்குள் ரெயில் சேவையை 2 மடங்காக உயர்த்த திட்டம்- மத்திய ரெயில்வே அமைச்சகம் தகவல்

Published On 2025-12-27 08:01 IST   |   Update On 2025-12-27 08:01:00 IST
  • பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
  • முக்கியமான 48 நகரங்கள் இந்த ரெயில்வே திட்டமிடலில் அடங்கும் என ரெயில்வே திட்டமிடல் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது, வருகிற 2030-ம் ஆண்டிற்குள் 48 முக்கிய நகரங்களில் 2 மடங்கு புதிய ரெயில்களை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகளை அமைப்பது மற்றும் நகரங்களைச் சுற்றி புதிய ரெயில் முனையங்களை உருவாக்குவது, ரெயில்களை பராமரிக்க மிகப்பெரிய பணிமனைகளை அமைப்பது போன்ற கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, புனே, மதுரா, ஆக்ரா மற்றும் லூதியானா உள்ளிட்ட முக்கியமான 48 நகரங்கள் இந்த ரெயில்வே திட்டமிடலில் அடங்கும் என ரெயில்வே திட்டமிடல் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

உடனடித் தேவைகள், குறுகிய காலத் திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்கள் என ஒவ்வொரு மண்டல ரெயில்வே நிர்வாகமும் ரெயில் முனையத் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ரெயில் பாதைகளின் திறனையும் மேம்படுத்தி, தெளிவான காலக்கெடுவுடன் கூடிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News