null
சபரிமலையில் இன்று மண்டல பூஜை - தங்க அங்கியில் ஐயப்பன் அருள்பாலித்தார்
- அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன.
- வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்தனர்.
ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்ட தங்க அங்கியை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக்கொண்ட காட்சி.
மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டு, நேற்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
இந்தநிலையில இன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. நெய் அபிஷேகம் காலை 9 மணி வரை நடத்தப்பட்டது.
பின்பு தங்க அங்கியுடன் ஜொலித்த ஐயப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரத்தில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் மதியம் ஒரு மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை அடைக்கப்படும்.
அதன்பிறகு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இன்று நாள் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலமாக 32 ஆயிரம் பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 35 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு முறையில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 37 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அத்துடன் 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவுக்கு வருகிறது.
இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 25-ந்தேதி வரை 30 லட்சத்து ஆயிரத்து 532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு(2024) மண்டல பூஜை சீசனில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25-ந்தேதி வரை 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்களே சபரிமலைக்கு வந்துள்ளனர்.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 2 நாட்களுக்கு பிறகு, அதாவது வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி கோவில் நடையை திறப்பார். மறுநாள்(31-ந்தேதி) மகர விளக்கு பூஜை வைபவம் தொடங்குகிறது.
மரக ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். அதனை சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிப்பார்கள்.
மண்டல பூஜை காலத்தை போன்றே மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.