செய்திகள்
கலெக்டர் அருண்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-09-01 16:25 IST   |   Update On 2020-09-01 16:25:00 IST
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கில் மத்திய அரசு வெளியிட்டுள்ள கூடுதல் தளர்வுகள் புதுவையிலும் அமல்படுத்தப்படும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனைத்து கடைகள், ஒட்டல்கள், தனியார் அலுவலகங்கள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

மருந்தகங்கள், பால் பூத்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு இல்லை. இரவு 9 முதல் காலை 5 வரை அவசர தேவைகளை தவிர்த்து யாரும் வெளியே வரக்கூடாது. வாகனங்களும் இயக்கக்கூடாது.

கடற்கரை சாலை காலை 5 முதல் மதியம் 12 வரை திறந்து இருக்கும். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வருகிற 30-ந் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் (50 சதவீதம் மட்டும்) அது தொடர்பான பணிகளுக்காக பள்ளிகளுக்கு 21-ந் தேதிக்கு பிறகு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஐ.டி.ஐ. உள்ளிட்ட திறன் தொழிலாளர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 21-ந் தேதிக்கு பின்னர் அனுமதி அளிக்கப்படும். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுநிலை தொழில்படிப்பு மாணவர்கள் ஆய்வகப் பயிற்சிகளுக்காக 21-ந் தேதிக்கு பிறகு அனுதிக்கப்படுவார்கள்.

அரசியல் நிகழ்ச்சிகள், சமூக, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள் 100 பேருடன் நடத்த 21-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படும். திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்பதற்கும் 21-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படும்.

திரையரங்குகள், பூங்காக்கள், கலையரங்குகள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை தொடரும்.

புதுவையில் கொரோனா அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எல்லை மறுநிர்ணயம் மாவட்ட அதிகாரிகளால் செய்யப்பட உள்ளது. அப்பகுதி விவரங்கள் இணையத்தில் வெளியிடுவோம்.

இந்த பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ அவசிய தேவைக்கு மட்டுமே அனுமதி உண்டு. இங்கு வீடு வீடாக கண்காணிக்க உள்ளோம்.

இவ்வாறு கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

Similar News