செய்திகள்
அன்பழகன் எம்.எல்.ஏ.

கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்- அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2020-08-27 18:03 IST   |   Update On 2020-08-27 18:03:00 IST
வீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கொரோனா தொற்றை தடுக்க முடியாமல் அரசு முழுமையாக தோல்வி கண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொலை நோக்கு சிந்தனையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் முழுமையான ஈடுபாடும் இல்லாததால் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

புதுவையில் தினந்தோறும் சுமார் 1200 பேருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்படுகிறது.

இது பரிசோதனை செய்யப்படுவதில் 42 சதவீதம், அதாவது பரிசோதனை செய்யப்படுபவர்கள் 2 பேரில் ஒருவருக்கு தொற்று ஏற்படுகிறது.

தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆயிரத்து 800 பேர்கள் மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் உள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் படுக்கை வசதி இல்லாததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எவ்வித சிறு உதவியும் அரசின் சார்பில் வழங்காததால், அவர்கள் சாப்பாடு மற்றும் சத்தான உணவின்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்படும் நோயாளிகளுக்கு தினந்தோறும் அரசு சுமார் ரூ.500 செலவு செய்கிறது.

எனவே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் உரிய நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

நோயாளிகளின் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி தற்போது ஏன் உணவுப் பொருட்களை வழங்க வில்லை? நடமாடும் கொரோனா பரிசோதனையை அரசு நிறுத்தியுள்ளது ஏன்.?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News