செய்திகள்
சாலையில் கருவேல மரங்களை வெட்டிப்போட்டு பொதுமக்கள் போராட்டம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா மருத்துவமுகாம் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களை வெட்டிப்போட்டு தடுப்பு ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா மருத்துவமுகாம் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களை வெட்டிப்போட்டு தடுப்பு ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இப்பகுதியை சுற்றிலும் வீடுகள் இருப்பதாலும், வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் இருப்பதாலும் இங்கு கொரோனா மருத்துவமுகாம் அமைக்கக்கூடாது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் வேறு மாற்று இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசார் கூறுகையில், இப்பகுதியில் கொரோனா மருத்துவமுகாம் அமைக்க எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. முன்னறிவிப்பு இன்றி கொரோனா வார்டு அமைக்கப்பட மாட்டார்கள் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.