செய்திகள்
போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த 2 மாணவிகள்

விடுதியில் தங்க வைத்து படிக்க வையுங்கள்: போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த 2 மாணவிகள்

Published On 2020-06-15 08:22 IST   |   Update On 2020-06-15 08:23:00 IST
பெற்றோரை இழந்து தவிக்கும் 2 மாணவிகள், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது அவர்கள், தங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
பண்ருட்டி :

பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்ததில் பாபு உயிரிழந்தார். இதையடுத்து லதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பாபு உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்து வந்த லதாவும், உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளும், வயது முதிர்ந்த தங்களது பாட்டி செந்தாமரையின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதற்கிடையே பாபுவின் மூத்த மகள் திடீரென மாயமானார். இதையடுத்து செந்தாமரை கடந்த சில வாரங்களாக போதிய வருமானமின்றி தனது பேத்திகள் ஜீவா (வயது 14), தர்ஷினி(10) ஆகியோருடன் தவித்து வந்தார்.

இந்நிலையில் செந்தாமரை நேற்று முன்தினம் தனது பேத்திகளுடன் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது ஜீவா, தர்ஷினி ஆகியோர் அங்கிருந்த போக்குவரத்து காவலர் ராஜதீபனிடம், நாங்கள் பண்ருட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறோம். எங்களுக்கு பெற்றோர் இல்லை. வயதான பாட்டியால் எங்களை மேற்கொண்டு படிக்க வைக்க இயலவில்லை. அதனால் தாங்கள் எங்கள் இருவரையும் ஏதாவது ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து, படிக்க வையுங்கள் என கண்ணீர் மல்க கெஞ்சினர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்துக்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.

அப்போது மாணவி ஜீவா போலீசாரிடம் கூறுகையில், எங்க பாட்டிக்கு வயதாகி விட்டதால் வேலைக்கு போகமுடியாமல் அவங்களும் வீட்டில் இருக்காங்க. வருமானம் இல்லாததால் ஒரு நாளைக்கு, ஒரு நேரம் சாப்பிடுவதே சிரமமாக உள்ளது. இங்குள்ள உறவினர்களிடமும் எதுவும் உதவி கேட்கும் நிலையில் அவர் இல்லை. கடையில் கடனாக டீயும், பண்ணும் வாங்கி தருவாங்க. அதுதான் எங்களுக்கு பல நாட்கள் சாப்பாடும் கூட. எப்போதாவது பக்கத்தில் உள்ள உறவினர்கள் சாப்பாடு கொடுப்பார்கள். அதை நானும், எனது தங்கையும் பங்கிட்டு சாப்பிடுவோம். அப்புறம் அணிந்து கொள்ள மாற்று துணி கூட கிடையாது. எங்களிடம் இருக்கும் ஒரு சில சட்டையும் கிழிந்த நிலையில் உள்ளது. அதையே ஊசி நூலால் தைத்து, மாற்றி மாற்றி போட்டுக்குவோம்.

நாங்கள் இருந்த கூரை வீடு கூட சேதமடைந்து போச்சு. மழை பெய்தால் வீடு முழுவதும் ஒழுகும். இருப்பதற்கு கூட வீடு இல்லை. அப்பா பாம்பு கடித்து இறந்ததால், அந்த வீட்டில் இருக்கவும் பயமா இருக்கும். தற்சமயம் சித்தி வீட்டில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தான் இருக்கின்றோம். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம். எங்களை ஏதேனும் ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பீர்களா என்று கேட்டு கண்ணீருடன் கூறினார். இதை கேட்டு கண் கலங்கிய போலீஸ்காரர் ராஜதீபன், சிறுமிகள் 2 பேருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அளித்து, புத்தாடைகள் வாங்கி கொடுத்து, உடனடியாக நிவாரண பொருட்களையும் வழங்கினார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ராஜதீபனை பாராட்டினார். மேலும் மாணவிகள் 2 பேரையும், தொண்டு நிறுவன உதவியுடன் அவர்கள் கல்வி தொடர ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News