செய்திகள்
கடல் சீற்றம்

கடல் சீற்றம் அதிகரிப்பால் கடலூர் மீனவர்கள் பீதி

Published On 2020-05-19 17:32 IST   |   Update On 2020-05-19 18:26:00 IST
அம்பன் புயல் காரணமாக கடலில் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது.
கடலூர்:

வங்கக்கடலில் அம்பன் புதிய புயல் உருவாகி கடந்த மூன்று நாட்களாக கடல் பகுதிகளில் பலத்த கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டு வருகின்றன. மேலும் இந்த புதிய புயல் பெரிய அளவில் சூறாவளிப் புயலாக மாறி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடல் அலை சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு முதல்  கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, ராசாப்பேட்டை, துறைமுகம், சொத்திக்குப்பம், அக்கரை கோரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அலை சுமார் 20 அடி முதல் 30 அடி வரை முன்னோக்கி வந்து செல்கிறது.

இதன் காரணமாக தாழங்குடா பகுதியில் படகு நிறுத்துவதற்கு இடமில்லாமல் கடற்கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் கடல் அலையில் இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சுதாரித்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக 50 அடிக்கு சிரமப்பட்டு கொண்டு சென்று தென்னை மரத்தில் கட்டி அங்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

மேலும் கடல் அலை நாளுக்குநாள் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது. மேலும் மீனவர்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News