செய்திகள்
கொலை செய்யப்பட்டவர்கள் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட காட்சி.

3 பேரை கொன்று புதைத்தது ஏன்? கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம்

Published On 2020-04-23 18:19 IST   |   Update On 2020-04-23 18:19:00 IST
பொன்னை ஆற்றில் 3 பேரை கொன்று புதைத்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வேலூர்:

சென்னையை சேர்ந்த ஆசிப்அகமது திருக்கோவிலூர் தெளிபகுதியை சேர்ந்த நவீன்குமார் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா. இவர்களை ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் யுவராஜ், அரவிந்தன், வாசு, ஜெயபிரகாஷ் மற்றும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அண்ணன் தம்பியான சூர்யா, சதீஷ், இளங்கோ, சாரு ஆகிய 8 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்களை வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை ஆற்றில் ஒரே குழியில் புதைத்தனர்.

காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் நேற்று கொன்று புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மண்டை ஓடு எலும்புகள் என தனித்தனியாக கிடந்தன சூர்யா ஆசிப் அகமது ஆகியோரின் பிணத்தை அவரது பெற்றோர்களும் நவீன் குமார் பிணத்தை அவரின் மனைவி அடையாளம் காட்டினர். அப்போது அவர்கள் கதறி அழுதனர்.

தோண்டி எடுக்கப்பட்ட 3 பேரின் பிணங்களும் வேலூர் தடய அறிவியல் துறை அலுவலர் சொக்கநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் 3 பேரின் பிணங்களும் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கொலைக்கான காரணம் குறித்து கைதான சென்னை சகோதரர்கள் சூர்யா, சதீஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் சென்னையைச் சேர்ந்த இளங்கோ சாரு தலைமையிலும் ஆஷிப், நவீன்குமார் ஆகியோர் என இரு குழுக்களாக பைக் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோம். இதில் எங்கள் தரப்பைச் சேர்ந்த இளங்கோ உள்பட 4 பேரும் அடிக்கடி கைது செய்யப்பட்டோம். ஆசிப் போலீசாரிடம் தகவல் கூறியதன் பேரில் தான் நாங்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதனால் ஆசிப்பை கொலை செய்ய திட்டமிட்டோம். இளங்கோ விற்கும் ராணிப்பேட்டையை சேர்ந்த பிரகாசுக்கும் ஜெயிலில் பழக்கம் இருந்தது. இதனால் ஜெயபிரகாஷ் மூலம் ஆசிப்பை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

சம்பவத்தன்று ஆசிப், நவீன்குமார் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக திருக்கோவிலூர் தெளி கிராமத்திற்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவரிடம் இளங்கோ செல்போனில் தொடர்பு கொண்டு வேலூர் மாவட்டம் திருவலத்தில் மதுவிருந்து இருப்பதாகவும் உடனே வரும்படியும் தெரிவித்தார். இதனையடுத்து இளங்கோ உள்பட நாங்கள் 4 பேரும் ஜெயப்பிரகாஷ் உட்பட அவரது கூட்டாளிகள் 4 பேரும் என 8 பேரும் தயார் நிலையில் இருந்தோம். ஆசிப் தனியாக வருவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால் அவருடன் நவீன்குமார் அதே ஊரை சேர்ந்த உறவினர் சூர்யா ஆகியோரும் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பொன்னையாற்று பகுதிக்கு அழைத்து சென்று அனைவரும் மது குடித்தோம். அப்போது திட்டமிட்டது போல இளங்கோ ஆசிப்பை திடீரென தலையில் கத்தியால் வெட்டி சாய்த்தார்.

மேலும் நவீன் குமாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றோம். அவருடன் வந்திருந்த மாணவர் சூர்யாவை விட்டு விடலாம் என நினைத்தோம். ஆனால் அவர் வெளியே கூறி விடுவார் என்ற பயத்தில் அவரையும் வெட்டி கொலை செய்தோம்.

பின்னர் தயாராக வைத்திருந்த மண்வெட்டி மூலம் குழி தோண்டி ஒரே குழியில் 3 பேரையும் புதைத்தோம். அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இளங்கோ, சாரு, ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News