செய்திகள்
நெல் மூட்டைகள்

அரக்கோணம், நெமிலி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் வேதனை

Published On 2020-04-23 12:11 IST   |   Update On 2020-04-23 12:11:00 IST
அரக்கோணம், நெமிலி நேரடி கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல்மூட்டைகள் விலை போகாமல் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேலூர்:

அரக்கோணம் மற்றும் நெமிலி பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.

நெல் அறுவடை செய்யப்பட்டு அவற்றை நெல் மூட்டைகளாக ஒன்று சேர்த்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அரக்கோணம் மற்றும் நெமிலி ஒன்றியங்களில் நெமிலி, சயனபுரம், கீழ்வெங்கடாபுரம், புதுகண்டிகை, பள்ளூர், சேத்தமங்கலம் அருகிலபாடி, திருமால்பூர், எஸ்.கொளத்தூர், அகவலம், அசநெல்லிகுப்பம், ரெட்டிவலம், தக்கோலம், புதுக்கேசாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது.

அரக்கோணம் மற்றும் நெமிலி ஒன்றியங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரிகள் அவற்றை கொள்முதல் செய்யாமல் அங்கேயே வெட்ட வெளியில் வைத்துள்ளனர்.

இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சேதமாகிறது. கடன் வாங்கி பல நாட்கள் பாடுபட்டு அறுவடை செய்த நெல்மூட்டைகள் விலை போகாமல் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொரோனா பிரச்னை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அப்படியே தேக்கி வைத்துள்ளனர்.

கலெக்டர் தலையிட்டு உடனடியாக விவசாயிகளின் அனைத்து நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News