2 வாலிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்-அப்பில் கொரோனா வதந்தி பரப்பிய 3 பேர் கைது
குடியாத்தம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பயம் ஆட்டிப்படைக்கிறது. மேலும் இது சம்மந்தமான வதந்திகளும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
குடியாத்தம், பேரணாம்பட்டு ரோடு நாராயணசாமி தோப்பு பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 18) மற்றும் சுண்ணாம்பு பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோரின் புகைப் படங்களை தனித்தனியாக வைத்து செய்தி சேனல்களில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் போட்டு அதில் அந்த வாலிபர்கள் படத்தை வைத்து இந்த வாலிபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வீடியோ கிளிப்பிங், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரவியது.
அதனை பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் போலீசில் புகார் அளித்தனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் துணை கொண்டு இந்த போலியாக வீடியோ கிளிப்பிங் செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை சிவகாமி அம்மன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் விஜயன் (19), ராஜா கோவில் கிராமத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ள சுகுமார் (19), செதுக்கரை பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சுகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் விஜயன் பாதிக்கப்பட்ட திவாகரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விளையாட்டாகவும் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதற்காகவும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.