செய்திகள்
ஆம்பூரில் இலவச பிரியாணி வழங்கப்பட்ட காட்சி

ஆம்பூரில் இலவசமாக பிரியாணி, சிக்கன் 65 வழங்கிய வியாபாரிகள்

Published On 2020-03-16 16:36 IST   |   Update On 2020-03-16 16:36:00 IST
ஆம்பூரில் சிக்கன் விற்பனை வீழ்ச்சியை தடுக்க வியாபாரிகள் இலவசமாக பிரியாணி மற்றும் சிக்கன் 65 வழங்கினர்.
ஆம்பூர்:

கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பியுள்ளனர்.

இந்த வதந்தியால் சிக்கன் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ 30 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.

ஆனாலும் பொதுமக்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் சிக்கன் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நேற்று ஆம்பூரில் ஒரு கிலோ ரூ 30 க்கு விற்பனை செய்யப்பட்டது அதனையும் யாரும் வாங்கவில்லை.

இதனால் ஆம்பூர் உமர் சாலை பகுதியில் ஆம்பூர் சிக்கன் சென்டர் மற்றும் சாந்தி சிக்கன் சென்டர் கடைக்காரர்கள் ஒன்றிணைந்து மக்களிடையே சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்பதை எடுத்துரைக்க முடிவு செய்தனர்.

இதற்காக வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடைகளில் நேற்று இலவசமாக பிரியாணியும் சிக்கன் 65 வழங்க ஏற்பாடு செய்தனர். உமர் சாலையில் சாமினா பந்தல் அமைத்தனர். இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு பேனர் வைத்தனர்.

இதைக்கண்டு பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கினர்.

பொதுமக்கள் கொரோனா பீதியை புறந்தள்ளிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டிபோட்டு சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர்.

சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பிரியாணி சாப்பிட்டு சென்றனர். கடை முன்பு கூட்டம் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் உமர் சாலை பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Similar News