செய்திகள்
கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர்

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது

Published On 2020-01-25 17:10 GMT   |   Update On 2020-01-25 17:10 GMT
ஆலங்குடி அருகே முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவனேசன் (வயது 34). பட்டதாரியான இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வீரச்சிபாளையத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீரச்சிபாளையத்தை சேர்ந்த மாகாளி என்பவரின் மகள் தங்கமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிவனேசன் முதல் திருமணத்தை மறைத்து, ஆலங்குடி அருகே உள்ள குலமங்கலம் தெற்கு பூக்காரன் தெருவை சேர்ந்த மாசிலாமணியின் மகள் பிருந்தாதேவியை(28) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது பிருந்தாதேவி வீட்டில் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. திருமணம் முடிந்து ஒரு வாரகாலம் மனைவியுடன் இருந்த சிவனேசன், பின்னர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீரச்சிபாளையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் ஊருக்கு வரவில்லை.

பிருந்தாதேவி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஊருக்கு வந்து கூட்டிச்செல்வதாக கூறியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, பிருந்தாதேவியை கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறும், அவருக்கு அரசு அதிகாரி வேலை வாங்கி தரும் நடவடிக்கையை தான் மேற்கொள்வதாகவும் சிவனேசன் கூறியதாக தெரிகிறது. இதை நம்பாத பிருந்தாதேவி, தனது குடும்பத்தினருடன் சிவனேசன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்தவர்கள், சிவனேசனின் வீட்டை காட்டியுள்ளனர். வீட்டிற்கு சென்ற பிறகுதான், சிவனேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது, அவர்களுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முதல் திருமணத்தை மறைத்து, தன்னை 2-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய சிவனேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிருந்தாதேவி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அப்போது போலீசார், அவரை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிருந்தாதேவி கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து சிவனேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News