செய்திகள்
தன்னந்தனியாக ஸ்கூட்டரில் பயணம் மேற்கொள்ளும் நித்து சோப்ரா.

இந்தியா முழுவதும் ஸ்கூட்டரில் தனியாக பயணம் செய்யும் பெண் டாக்டர்

Published On 2020-01-02 04:14 GMT   |   Update On 2020-01-02 04:14 GMT
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை கண்டித்து இந்தியா முழுவதும் ஸ்கூட்டரில் தனியாக பயணம் செய்யும் பெண் டாக்டர் நாளை தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
ஈரோடு:

ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ரா பகுதியை சேர்ந்தவர் டங்கர் சந்த்சோப்ரா. இவரது மகள் நித்து சோப்ரா (வயது 29) டாக்டர்.

ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளும் போலீசாரால் என்கவுணடரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இளம்பெண் நித்து சோப்ரா பெண்கள் இது போன்ற பாலியல் சம்பவத்தில் சிக்கி கொள்ளாமல் விழிப்புணர்வுடனும் வலிமையுடனும் இருக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் தன்னந்தனியாக ஸ்கூட்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

காஷ்மீரில் இருந்து ஸ்கூட்டரில் பயணத்தை தொடங்கிய நித்து சோப்ரா நேற்று ஈரோடு வந்தார். தன்னந்தனியாக பெண்களுக்காக விழிப்புணர்வு ஸ்கூட்டர் பயணம் மேற்கொண்ட நித்து சோப்ராவுக்கு ஈரோடு இந்திரா நகரில் வரவேற்பு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது நித்து சோப்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் டாக்டருக்கு (எம்.பி.பி.எஸ்) படித்து முடித்துள்ளேன். சமூக சேவையே எனது லட்சியம். ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் என்னை மட்டுமல்ல மொத்த பெண்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெண்கள் என்றாலே பயந்த சுபாவம் உள்ளவர்கள் என நினைக்கின்றனர். இதை பெண்கள் மாற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் துணிச்சல் வேண்டும். பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை வர வேண்டும் என வலியுறுத்தி எனது பயணத்தை நடத்தி வருகிறேன்.

என்னிடம் ஒரு கத்தி உள்ளது. இந்த கத்தியை பயன்படுத்தி ஒருவரை குத்தினால் ½ மணி நேரம் அவர் சுய நினைவு இல்லாமல் இருப்பார். எனவே பெண்கள் பயத்தை போக்கி வலிமையுடன் மன உறுதியுடன் செயல்பட வேண்டும். வீட்டுக்குள் பெண்கள் முடங்கி கிடக்காமல் வெளியே வந்து சாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமும் ஸ்கூட்டரில் 350 கிலோமீட்டர் பயணம் செல்லும் நித்து சோப்ரா கன்னியாகுமரியில் நாளை தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
Tags:    

Similar News