செய்திகள்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்வு

Published On 2019-12-04 14:29 IST   |   Update On 2019-12-04 14:29:00 IST
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்றை விட 3 அடி உயர்ந்து இன்று காலை 99 அடியை தாண்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால் பிற்பகலில் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
நெல்லை:

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று பகல் பாபநாசம் அணைப்பகுதியில் அதிக அளவு மழை பெய்ததால் தாமிபரணி ஆற்றில் தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டது. இதனால் சற்று குறைந்த வெள்ளம் நேற்று இரவு மீண்டும் அதிகரித்தது. இதனால் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடுகிறது.

பாபநாசம் படித்துறை மண்டபம், நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபம், தைப்பூசம் மண்டபம் மற்றும் ஆற்றின் கரையோரம் உள்ள அனைத்து கல் மண்டபங்களையும் சூழ்ந்தபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.



நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆனால் நேற்றிரவு பாபநாசம் அணை உள்பட மாவட்டத்தின் பெரும் பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று குறைந்தது.

இன்று காலை விநாடிக்கு 5,468 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5,258 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று மாலையில் பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்துள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்தும் தண்ணீர் வடியத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 141.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 145.31 அடியாக உள்ளது.

மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை விநாடிக்கு 2,707 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை.

இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்றை விட 3 அடி உயர்ந்து இன்று காலை 99 அடியை தாண்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால் பிற்பகலில் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

நெல்லை மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் இந்தாண்டு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்சினை இல்லாமல் தண்ணீர் போதுமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 118 அடியாகும். எனவே அந்த அணையும் விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் இதுவரை வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் இன்னும் நிரம்பவில்லை. தற்போது வடக்கு பச்சையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 226 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இதனால் அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களாக வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை அந்த அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது.

கடனாநதி அணை, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி கிளை நதிகளிலும் தண்ணீர் அதிகமாக செல்கிறது. தொடர் மழை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-48, சேர்வலாறு-26, கடனாநதி-25, ராமநதி-22, சேரன்மகாதேவி-18.4, கன்னடியன்-16, அம்பை-14.6, கொடுமுடியாறு-10, பாளையங்கோட்டை-9.2, ராதாபுரம்-9, சிவகிரி-8, நெல்லை-6, நாங்குநேரி-5.5, தென்காசி-4.2, செங்கோட்டை-3, அடவிநயினார்-2.4, குண்டாறு-2, சங்கரன்கோவில்-1.

Similar News